Wednesday, 30 May 2018

ஒரு பெண்ணின் கதறல்

யாரோ ஒருத்தியின் 
கலங்கடிக்கும் கதறல்

எனக்கே தெரியவில்லை...,

எதற்காக வாழ்கிறேன்...?

யாருக்காக வாழ்கிறேன்...?

எதைநோக்கி நகர்கிறேன்..?

சாய்வதற்கு தோள் எங்கே...?

துன்பத்தில் ஆறுதல் எங்கே...?

தேவைகளில் உதவி எங்கே...?

இதயத்திற்கு துணை எங்கே...?

களைப்பை தணிக்கும் மடி எங்கே...?

தைரியம் தரும் நம்பிக்கை எங்கே..?

 பதில் இல்லாத
கேள்விகள் ஆயிரம்...

நட்புகளின் கரம் உடனிருந்தும்...,

தனிமை என்னை
தோற்கடித்து விடுகிறது...!

ஒவ்வொரு முறையும்,
தேற்றித்தான் பார்க்கிறேன்......!

ஆறுதலும் அறிவுறையும்

மூளையை எட்டி
 மனதை தொடுவதற்குள் -ஏனோ

ஆங்காங்கே தேங்கிவிடுகிறது...

துரோகங்கள் வதைக்கிறது......

அனைத்திற்கும் காரணம் ஒன்றே....!

உடன் பயனிக்க வந்த
உற்ற துணையின்
உயிர் உலகை நீங்கி

எனை தனிமைப்படுத்தியதால்....!

தனிமையில் வாழ்வை
போராடி  வாழும்
வாழ்விழந்தவளின்
ஆழ்மனதின் அழுத்தம்......


- written by JERRY

Thursday, 24 May 2018

இது வெறும் கண்துடைப்பிற்கா...?

என் மக்களின்,
எதிர்ப்பு எப்படியோ....
எட்டியது அரசின்,
செவிகளில்...!

போராட்டங்களின், அமைதியை...
போர்க்களமாக மாற்றி...!
ஆளும் கட்சிகள்,
ஆளாத கட்சிகள் - எல்லாம்
ஆழமாக அரசியல்,
ஆதாயம் தேடிக்கொண்டார்கள்...!!

காவல்துறயை எதிரயாகவும்...!
அரசியல்வாதிகளை ஆறுதலாகவும்...!!
அழகாக சித்தரித்து விட்டீர்கள்...!!!

பணமும், அரசுவேலையும்...
ரத்தத்திற்கு விலையானது...!

உயாரிழப்பை தடுக்க...
உரிமைக்காக போராடினோம்...!
வருமானம் வற்றிப்போகும்,
வருத்தம் கூடிப்போனதில்...!!

வொறித்தனமாக வேட்டையாடி...!
வீதியில் வீசிவிட்டு...!!
விசாரணை ஆணையம் ....
யாரை விசாரிக்க நாடகமோ...!!!

உயிரை பறித்துக்கொண்டு...
உணர்வுகளை அடக்கிக்கொள்ள,
கேட்டுக்கொள்ளும் அசிங்கம்...!

மாட்டுக்காய் இணைந்தவர்கள்...
மனிதத்தை மறந்தார்கள் - பாவம்
மனித்ரகள்தானே அவர்களும்...!

எங்களுக்கான அரசென்று,
நம்புகிறோம் நம்பிக்கையிலல்ல...!
மனதில் கலந்த கட்டாயத்தில்...!!

காசுக்காக காவு வாங்கி,
சிதைத்துவிட்ட உயிர்கள்...
உயிரகளாக தெரியவில்லையோ...!

மனித உரிமை ஆணையம்,
நீதிமன்றங்கள் - எல்லாம்
வேடிக்கை பார்க்க மட்டும் தானோ...!

வேடிக்கை பார்த்து...
வருந்தபவர்களுக்கு -  ஒருநாள்
நாங்களும் வருத்தம்,
தெரிவிக்கும் நாள் வரும்...!

திட்டங்கள் பல காத்திருக்கிறது...!
உங்கள் மண்ணையும் அழிக்க...!!
அன்று எங்கள் உள்ளம்...
வேடிக்கை பார்க்காது...!
நிச்சயம் இணைந்திருக்கும், உங்களோடு...!!

உப்பிடும் எங்கள் உள்ளத்திற்கு...
உதவும் உணர்வுகள் அதிகம்...!

இனி இருப்பவர்களையாவது,
வாழ விடுங்கள்...!

பரபரப்பான செய்திகளுக்காக...
எங்களை சூரையாட வேண்டாம்...!
எங்களுக்காக இரங்கியவர்களுக்கு...
எங்களின் நன்றிகள்...!!

எங்களுக்காய் உயிரிழந்தவர்களுக்கு,
எதை ஈடுசெய்ய செய்ய...!
கண்ணீரில் மறைகின்றது கண்கள்...!!

ஆலை மூடும் உத்தரவு...
கண்துடப்பாக இருக்காது - என்றே
நம்புகிறது ஏமாளி உள்ளம்...!

மறதியில் மறந்துவிட்டு...
அடித்த நிகழ்வை ரசிக்க,
வழக்கம்போல் தயாராகுவோம்...!

அதுதானே மனித இன...
அவமானத்தின் உச்சகட்டம்...!!!

 
- written by JERRY 

       

Tuesday, 22 May 2018

கைவிரல் பத்தும் வெட்டப்பட்ட நிலை

கண்களில் கண்ணீர் இல்லை.....
இரத்தம் மட்டுமே..............

தண்ணீரை தாரை வார்த்தாய் ....
தாகத்தை அடக்க சொல்லி....

விவசாயிகளை தெருவில்
நிறுத்தினாய்......
மானத்தை துறக்க சொல்லி.....

சுவாசத்தை  கெடுத்தாய்....
கேன்சரை அனுபவிக்கச்சொல்லி.....

எதிர்த்து கேட்டோம்
அடித்து விரட்டினாய்.....

தாங்கிக் கொண்டு 
தொடர்ந்தோம் போராட்டத்தை......

பணத்தின் வெறியாட்டம்
மனிதத்தை  மறக்கடித்தது.....

ஜாதிகளும் மதங்களும்
பிரிவனை மறந்து
இணைந்தது தன்
இனத்தின் அழிவை தடுக்க....

இறுதியில் எல்லாம்
தோற்றுப் போனது......

சுயநலவாதிகளின் சுயநலத்தில்
சுவாசக்காற்றை  மீட்க
களம்கண்ட சொந்தங்கள்
காணதேசம் சென்றுவிட்டனரே.....

என்ன பாவம் செய்தனரோ
படுகொலை செய்ய
துணிந்தது ஏனோ........

உரிமையை கேட்டோம்
உயிரை பறித்தது ஏனோ.......
பணத்தில் நிரப்ப முடியுமோ
குடும்பத்தின் இழப்பை.....

படு கொலைக்கு
பதில் வேண்டும்......

இழப்பு எங்களுக்கானது......
வலியை நிச்சயம்
உணர்த்துவோம்.......
உணர்த்தும் வரை ஓயாது........
எங்களின் துடிப்பு......

- written by JERRY

Monday, 21 May 2018

தன்னிலை

தவறு செய்வது,
மனித இயல்பு...!

செய்த தவறை...
உணர்ந்து வருந்தி,
கலங்கும் உள்ளத்தை...
குத்திக் காட்டி,
குறைகள் சொல்லி,
தள்ளி வைத்து,
காயப்படுத்தும் உள்ளங்களே...
சிந்திப்போம் ஒரு கணம்...

வயதின் முதிர்ச்சியை விட,
மனதின் முதிர்ச்சியால்...

தவறுகளுக்காய் - ஒருவரை
தவிர்ப்பதை தவிர்த்து,
தட்டிக் கொடுத்து,
உள்ளத்திற்கு உணர்த்திவிட்டால்...!

தவறுகள் தவறுதலாகக்கூட,
தவறு செய்ய
தயங்கி நிற்கும்...!

காலத்தின் கைகளில்...
நாமும் தவறிழைக்கும்,
நிமிடங்கள் நிச்சயமுண்டு...!

தயங்காமல் வார்த்தைகளால்...
தாக்கும் வலிகள்...
வலியவரையும், வறியவராக்கிடும்...!

தன்னிலை மறந்தவராய்...
தடுமாறி விடாமல்...
என்னிலையிலும் தன்னிலையோடு,
தனித்து நிற்போம்...!

- written by JERRY

Sunday, 13 May 2018

அட ஓடித்தான் பாரு

தொலஞ்ச வாழ்க்கை,
தூரத்துல நிக்குது...!

இழப்புகள் ஏராளமாய்,
இழந்து கிடக்குது...!

ஏமாற்றங்கள் எப்பவும்,
ஏமாத்தாம தாக்குது...!

கவலைகள் வாழ்க்கயின்,
கனவையெல்லாம் கலைக்குது...!

மத்தவங்கள குத்தஞ்சொல்ல,
மனசு விரும்பல...!

முழுசா மூலையில,
முடங்கிடவும் முடியல...!

அப்படி இப்படின்னு...
பொலம்பித் தவிக்குது,
பலமனசு பூமியில...!

சாக்குப்போக்கு சொல்லி...
சரிஞ்சி கிடக்காம...
திறமைய உனக்குள்ள,
தேடித்தான் பாரு...!

தினமும் நீயத வளக்க...
தடையத் தாண்டி,
ஓடித்தான் பாரு...!

வெற்றிய  இலக்கா...
விடாம நீயும்,
துரத்தித்தான் பாரு...!

வியப்பான வாழ்க்கை...
விருந்தா வர்றத...
பொறுமயா - நீ
வேடிக்கை பாரு...!

- written by JERRY


அம்மா

கருவில் கலந்தேன்
உயிராய் வளர்தாய்...
மண்ணில் பிறந்தேன்
மார்பில் சுமந்தாய்....

இரத்தத்தை பாலாக்கி
உணவாய் ஈந்தாய்....
எனது காயங்களை
உனது வலியாய் துடித்தாய்...
மாசற்ற அன்பை
மாறாமல் தந்தாய்....

என் தவறுகளை
எனக்கு மன்னித்தாய்....
எனக்காகவே வாழ்கிறாய்...
என்னையே உன்
வாழ்க்கையாய் வாழ்கிறாய்....

காணா உருவமாய்
கருவில் தொடங்கி
கல்லறை வரை
மாறமல் வாழும்
அன்பிற்கு இனிய
அன்னையர் தின வாழ்த்துகள்.......
     
- written by JERRY

Sunday, 6 May 2018

(க)(இ)ஷ்டம்

நம்ம வாழ்க்கையில்...

கஷ்டப்படாம நமக்கு
கிடைக்கிறது கஷ்டம்
மட்டும்தான்-அது
இஷ்டப்பட்டு வந்தாலும்...
இஷ்டப்படாம கஷ்டமேன்னு
நாம ஏத்துக்கிட்டு...

கஷ்டத்தோட கஷ்டப்பட்டு,
வாழுறதுதான் இங்க...
கஷ்டமான விஷயம்...!

கஷ்டத்துலயும் வெற்றிய
தேடி  விடாம ஒடுனா
இஷ்டப்பட்ட வாழ்க்கை
நமக்காக காத்திருக்கும்
இஷ்டத்தோட.........!

- written by JERRY

Friday, 4 May 2018

நீட் அநீதிக்கு எதிரான மாணவர்களின் கர்ஜணை சவால் இது


கலக்கத்தில் உள்ளம்
கணத்துக் கொண்டிருக்கிறது....

தடைகள் உருவாகவில்லை...!
இங்கு உருவாக்கப்பட்டுள்ளது...!!

கனவுகள் தவறா..?
கண்ட இடம் தவறா..?

திறமைகள் சோதிக்கப்படுகிறதா...?
இல்லை தவிர்க்கப்படுகிறதா...?

என் மண் தகுதியழந்ததா..?
இல்லை - தரமிழந்ததா..?

நுழைவுச்சீட்டுக்கு நுழையும்,
அனுமதியில்லையோ எம்மண்ணில்...!

பாதுகாப்பற்ற உலகில்,
பக்கத்துத்தெரு செல்வதற்கே,
படபடக்கும் உள்ளம்...!
கிராமம் தாண்டா கால்கள்...!!

மாநில எல்லையை...
எப்படிகடக்கப் போகிறதோ - என்ற
கவலையில் எம்பெற்றோர்கள்...!

பாகுபாடு எதற்காகவோ...?
மருத்துவத்தின் தரத்தை, உயர்த்தவென்று...
மறுபடியும் ஏமாற்றவேண்டாம்...!!

மருத்துவத்தை எங்கள் கனவாகவே,
முடக்கிவிடுவதற்கான சதியென்று...
அரசே மார்தட்டிக்கொள்ளுங்கள்...!

வெறுப்பை வெளிக்காட்ட - நாங்கள்
வேற்றுநாட்டு பிள்ளைகளல்ல...!
சொந்தமண்ணில் நிராகரிக்கப்பட்ட அகதிகள்...!!
என்பதே மிகப் பொருத்தம்...!!!

எங்களை நிராகரித்து...
எங்கள் இடங்களை யாருக்கு,
தாரைவார்க்கத் திட்டமோ...?

மைதானங்கள் மாற்றப்படலாம்...!
விளையாட்டும், வெற்றியும் எங்களுடையது...!!
விழுந்தாலும் வீழும் கோழைகளல்ல...!!!

எத்தனை இடையூறு தந்தாலும்...
எதிர்த்து ஜெயித்திடும்,
திறமையும் துணிவும்-எங்களுக்கு
சற்றே அதிகம்...

செயலிழந்தவர்கள் சிலரே...!
செயல்படும் கரங்களின் ஆதரவில்,
களம்காண நாங்கள் தயார்...!!

உதவும் கரங்களே
சுருக்கங்கள் வேண்டாம்...!
இணைந்திடுங்கள் எங்களோடு...
நிச்சயம் வென்றிடுவோம்...!!

தகர்த்திட நாங்கள் பாறைகளல்ல...!
திறமையில் உயர்ந்த எரிமலைகள்...!!

- written by JERRY

Thursday, 3 May 2018

எதை நோக்கி ஓடுகின்றோம்

பட்டப்படிப்பு படிச்சு முடிச்சி...

பட்டணத்துல வேலை கிடச்சி...

படிப்புக்கேத்த மாப்புள்ளய புடிச்சி...

கல்யாணத்தையும் கட்டி வச்சி...

வாடகைக்கு குடியும் வச்சி...

பட்டணத்து வாழ்க்கைய, 

பகட்டோடு வாழ -இராப்பகல் 

பாக்காம  ஓடவச்சி...

கொஞ்சம் ஓஞ்சி இருக்கையில,

கொழந்தையையும் பெத்து வச்சி...

பொறுப்பு கூடிப்போச்சுன்னு-ஒரு

நொண்டி சாக்கையும் சேத்துவச்சி...

பணம் சம்பாதிக்க ஓடிப்புட்டு...

பிள்ளயப் பாக்க நேரமில்லன்னு,

வேலைக்கு ஆளு வச்சி

பிள்ளையவிட்டு விலகவச்சி...

என்னடா வாழ்க்கை இது

பிள்ளையா...?

வேலையா...?

என்று யோசிச்சா...!

பாழாப்போன பணத்தேவை...

ஒரு அடி முன்னநின்னு

வேலையத் தேடி ஓடவைக்குது...!

பிள்ளயோட எதிர்காலத்துக்குன்னு,

நிகழ்காலத்த மறக்கவைக்குது...!!

- written by JERRY

Tuesday, 1 May 2018

உழைப்பாளர் தினம்

பணத்தில் வளர்ந்தவன்
முதலாளி அல்ல .....!
தொழிலாளியின் உழைப்பில்
உயர்ந்தவனே முதலாளி....!
மூலதனம் எவ்வளவு
முதலாளிகள் போட்டாலும்...!
முழுதனமாம் தொழிலாளியின்....
உழைப்பில்லாத எதுவும்...
பயனில்லாத குப்பைகளே......
உழைப்பைக் கொடுக்கும்...
தொழிலாளர் தோழமைகளுக்கு
உழைப்பாளர் தின வாழ்த்துகள்...

- written by JERRY

கையேந்தி நிற்குது

கூடாத சகவாசம்
எடுத்துக்கல அவகாசம்..!
வயித்துல வளந்தது
குப்பையில சேந்தது..!
வெயிலுக்கு வீடில்ல...
மழைக்கு குடையில்ல..
போட்டுக்க துணியில்ல..
வயித்துக்கு சோறில்ல..
வளத்துவிட ஆளில்ல...
எங்கேயோ திரிஞ்சி...
வீதியில உறங்கி...
எப்படியோ வளந்து...
தூக்கியெறிஞ்ச பாவி
பேர சொல்லி  சொல்லி
அம்மா தாயின்னு
கையேந்தி நிக்குது....!
இரக்கமுள்ள சில
மனுசங்க ஈரத்துல
வயித்த  கழுவுது....!
பழி ஒருயிடம்
பாவம் ஒருயிடமுன்னு
வீதிக்கு ஒன்னு
வழியில்லாம நின்னு
வறுமையில வாடுது....
பதறுது மனசு- இந்த பச்சிகள பாக்கையில...
ஆதரவு கொடுக்கும்
அனாத இல்லத்துக்கு
ஆதரவு கொடுப்போம்....

- written by JERRY