Sunday, 26 November 2017

கூடவே இருக்கும் தெய்வம்

தெய்வத்தை கண்டதில்லை - என

புலம்பித் திரியும்,

வேதனை எனக்கில்லை...!

மண்டியிட்டு பாதம் தழுவிய - என்னை

ஆசிர்வதித்து தரிசனம் தந்தது,

என்தெய்வம் எதிரில் நின்று...!!

Written by JERRY

Saturday, 25 November 2017

தேடும் கண்கள்

நமக்கான வாழ்க்கையை . . .

நாம் வாழ நினைக்கும் போதுதான் ,

உலகத்தின் கண்கள் விழித்து கொள்கின்றது . . !

எதை பேசி வாழ்க்கையை புதைக்கலாம் - என்று

காரணம் தேடுவதற்காக . . ! !

Written by JERRY

Thursday, 23 November 2017

சுதந்திரம்

சுதந்திர நாட்டில்,
பார்ப்பதற்கு உண்டு சுதந்திரம்...!
பேசுவதற்கு உண்டு சுதந்திரம்...!
கேட்பதற்கு உண்டு சுதந்திரம்...!

குருடனுக்கும்...
ஊமைக்கும்...
செவிடனுக்கும்...

சொன்னதை செய்வோம்,
சொல்லாததையும் செய்வோம் – என்று
ஏமாற்றும் அரசாங்கத்திற்கு உண்டு சுதந்திரம்...!

கடமையைச் செய்ய - சம்பளம்
போதாது என்று கையூட்டு வேண்டும்,
அலுவலருக்கும் உண்டு சுதந்திரம்...!

ஏழைகளுக்கு வறுமையை - மட்டும்
வைத்து வளமாக வாழ,
அதிகம் உண்டு சுதந்திரம்...!

முதல் மதிப்பெண் மாணவனுக்கும்,
முதல் பணக்கார மாணவனுக்கும்,
இட ஒததுக்கீடு சமம் - என்ற
சமத்துவத்தில் உண்டு சுதந்திரம்...!

தியாகிகள் தியாகம் செய்து,
பெற்ற சுதந்திரம்...!
தியாகம் செய்தது சுதந்திரத்தை,
அநியாயத்திற்கு சுதந்திரம்
வேண்டுபவர்களுக்கு...

இந்த நிலை மாறுவதற்கு,
காந்தியும்... பாரதியும்...
எங்கே மறைந்துள்ளனர்...!

தேடும் என் கண்களுக்கு,
சுதந்திரம் எங்கே..?
எப்போது கிடைக்கும் இப்போதய சுதந்திரம்.....

Written by JERRY


தொழில் அதிபர்

வேலையில்லை என்று,
வீணாகக் காலம் கழிப்பவர்களே...
தகுதியான வேலை என்று,
எதிர்பார்ப்பது ஏனோ...!

என்னையும் சற்று,
ஏறெடுத்துப் பாருங்கள்...!

உறவுகள் இல்லை...!
உறைவிடம் இல்லை...!!
உணவிற்காக எதிர்பார்த்து,
உலக வாழ்க்கையை வீணடிக்கவுமில்லை...!!!

இன்று நானோ,
பெரிய தொழில் அதிபர்...!

என் அலுவலகமோ...
நீங்கள் வீணாக்குவதை
தாங்கிப் பிடிக்கும்,
குப்பைத் தொட்டிகள்...!

வாழ்க்கையில் எதுவும்,
பயனற்றது அல்ல...!

பயன்படுத்தத் தெரிந்தவனுக்கு...
பயனற்ற பொருட்கள் - கூட
பயன்தரும் வாழ்விற்கு,
பயனுள்ள ஆதாரம் தான்...!

Written by JERRY

Wednesday, 22 November 2017

எது வாழ்க்கை...?


சோதனைகளும் வேதனைகளும் ஒன்றாய்,
சேர்ந்ததே வாழ்க்கை என்று...
கவலை கொண்டு வாழலாமோ...?
சாதனைகளும் வெற்றிகளும் நிறைந்த,
சரித்திரமே வாழ்க்கை என்று...
ஊக்கம் கொண்டு வாழலாமே...!

ஏழையாக அன்று பிறந்தேன்,
ஏழையாகவே வாழ்கிறேன் என்று...
கவலை கொண்டு வாழலாமோ..?
தடைகளை தகர்த்து இன்று,
தலை நிமிர்ந்து வாழ்கிறேன் என்று...
தோள் தட்டிக்கொண்டு வாழலாமே...!

தன்னலம் காக்க எவருமின்றி,
தத்தளித்து வாழ்கிறேன் என்று...
கவலை கொண்டு வாழலாமோ..?
பிறர்நலம் காத்து நின்று,
பெருமிதத்தோடு வாழ்கிறேன் என்று...
பெருமை கொண்டு வாழலாமே...!

பட்டப்படிப்பு படித்து சிறு,
பயனுமின்றி வாழ்கிறேன் என்று...
கவலை கொண்டு வாழலாமோ...?
உடல் உழைப்பால் நான்,
உயர்ந்து வாழ்கிறேன் என்று...
உள்ளம் வியந்து வாழலாமே...!

தன்னால் மட்டும் முடியுமென்ற,
தலைக்கணம் தவிர்த்து...
தன்னாலும் முடியும் என்ற...
தன்னம்பிக்கை கொண்டு வாழ்வதே,
நல்ல வாழ்க்கை...!

வாழ்வின் விளைவுகளுக்கு,
வளைந்து கொடுத்து,
எதிலும் விட்டுக்கொடுத்து,
வாழும் வாழ்க்கையை - நாமும்
வாழ்ந்துதான் பார்க்கலாமே...!

Written by JERRY

Tuesday, 21 November 2017

பென்சில் முனை

வாழ்வின் போராட்டங்களில், 
வளைந்து கொடுக்க - எனக்கு 
வழிகள் எதுவும் தெரியவில்லை...!

எடுத்த காரியங்கள், 
எல்லாமே தொடர்ந்து - எனக்கு 
தோல்விகளையே கொடுத்தது...!

மற்றவர்களிடம் வலிகளை, 
மனம்விட்டு பகிர்து கொண்டால்...
ஏளனப் பார்வைக்கு நாமே – வாசல் 
அமைத்துக் கொடுத்துவிடுவோமோ என்ற, 
ஏக்கத்தில் காகிதத்தை எடுத்தேன்...!

மனதின் வலிகளை கவிதைகளாக, 
எழுதத் துவங்கினேன்...!

சிறிது நேரத்தில் முனை கரைந்தது...! 
பென்சிலை சீவி மீண்டும் எழுதினேன்...!!

சுவாரஸ்யமாக எழுதும் வேளையில், 
முனை ஒடிந்தது...!

பென்சிலை சீவி மீண்டும் எழுதினேன்...!!

தொடர்ந்து செயலை மீண்டும் தொடர, 
சிந்தையில் சட்டென்று உதித்தது...!

தேவை என்று தெரிந்ததால்... 
நொடிந்த போதும் சரிசெய்து... 
உபயோகிக்கத் தெரிந்த - நமக்கு

வாழ்வின்  தேவையறிந்து, 
நொடிந்த போது – நம்மை 
சரிசெய்யத் தெரிவில்லை ஏன்...?

                          - என்று 
சிந்தித்துக் கொண்டே – என்
உள்ளத்திற்கு ஊக்கம் கொடுத்து...! 
வாழ்க்கையை வாழத் தொடங்கினேன்...!!  
நொடிந்தாலும் எழுவேன் என்ற நம்பிக்கையோடு்...........

Written by JERRY

Sunday, 19 November 2017

மவுனம் ஏன்...?

அழகிய மதியே – நீ 
மண்ணில் பூத்த நாளன்றே, 
எனக்கென்று உன்னை உரித்தாக்கினான்... 
உன்னை படைத்த நான்முகன்...!

கண்கள் உன்னைக் கண்ட கணத்தில், 
என் இதயம் விழித்துக் கொண்டது...!

அந்த நொடி முதல் உனக்காக, 
துடிக்கிறது என் இதயம்...!

உயிரோடு கலந்து அணு அணுவாய்...! 
என்னோடு காதல் யுத்தம் செய்கிறாய்...!!

உன் கரங்களைத் தழுவத் 
தவிக்கும் என் கரங்களுக்கு... 
உன்னில் இளைப்பாறுதல் உண்டோ...?

இரு சக்கர வாகனத்தில் என்பின்னே.. 
இனியவளே நீயமர்ந்து - என் 
இடையைக் கட்டிக்கொண்டு செல்லும், 
புனித யாத்திரை பயணிப்பேனோ...?

கடற்கரை மணலில் வீசும் காற்றில்... 
என் மடிமீது நீ தலைசாய்த்து, 
என் இதழோடு இதழ் சுவைத்து, 
நாணம் தரும் முத்தமொன்று தாராயோ...!

செல்லச் சண்டைகளோடு சிறு கோபம் கொண்டு... 
சில நிமிடங்களிலே ஓடி வந்து... 
கட்டித் தழுவி கோபம் தகர்த்திடாயோ...!

உன் மனம் விரும்பியதை - நீ 
அறியும் முன்னே அதை – நானறிந்து 
ஈடேற்றும் வாய்ப்பு கிடப்பது எப்போது...?

என் மனதில் தோன்றிய காதலை 
மங்கையே உன் மனதில் இணைத்து 
காதல் பூ பறிப்பேனோ...!

உலகம் கூடி நின்று, நம் காதலை 
எதிர்த்து என்முன் நின்றாலும்... 
துணிவோடு போராடி – உன்னோடு 
மணப்பந்தலில் மணவாளனாய் நின்று, 
மணப்பெண்ணாய் உன்னை மணமுடிக்கும் 
தருணம் வர காத்திருக்கிறேன்...!

மணம் முடிந்த நாள் முதல்... 
மண்ணோடு சேரும் நாள் வரை... 
உள்ளங்கையில் கிடைத்த உலகமாய், 
உன்னைத் தாங்கி நிற்பேனடி உயிரே...!

என் அன்பின் தாகத்தைத் 
தீர்த்து வைக்க கட்டிலில், 
மோகத்தோடு கட்டி அணைப்பாயோ...!

நம் உறவிற்கு அடையாளமாகப் 
பூத்த தொட்டில் மலரைத், 
தாலாட்டத் தவிக்கிறது மனம்...!

படிப்பிற்கு ஏற்ற வேலை... 
மனம் விரும்பிய வாழ்க்கை... 
மகிழ்ச்சியின் மனதோடு, 
மண்ணில் வாழும் நாள் வரை... 
உன்னோடு வாழ விளைகின்றேன்...!

தேவதையே... 
இந்த கனவுக் கோட்டை - நம்மை 
வாழ வைக்கும் வசந்தத்தின் மாளிகையா...?   
என் தேகத்தை புதைக்க நான் கட்டும் 
கல்லறைத் தோட்டமா...? 

என் வாழ்வின்.. 
தொடக்கத்தையும்... முடிவையும்... 
உனக்குள் விதைக்கின்றேனடி – அது 
முளைத்து துளிர் விடுமா – இல்லை 
காய்ந்த சருகாகி விடுமா...?

ஏன்... ஏன்... ஏன்... 
பதில் இல்லையே... ஏன்...? 

Written by JERRY

Saturday, 18 November 2017

வர்ணம் என்பது உண்மையில் நிறமா.?

பெற்ற பிள்ளைக்கு,
தாய்ப்பால் கொடுத்த அன்னை...
புத்தியில் ஜாதிப்பாலை,
தினமும் ஊட்டலாமோ...!?

ஆணும்... பெண்ணும்...
நிகரென வாழும் நாட்டில்,
ஜாதி என்னும் நஞ்சு,
நாள்தோறும் நடமாடலாமோ..!?

வறுமைக்குத் தன்
வாழ்வில் இடமளித்ததால்,
குலம் தாழ்ந்ததா..?
 
மனத்திற்கு பகட்டான
வாழ்வு கொடுத்ததால்
குலம் உயர்ந்ததா..?

உண்ணும் உணவில்
மாற்றம் உண்டோ..!

உடுத்தும் உடையில்
மாற்றம் உண்டோ...!!

எதைக் கொண்டு தரம் பிரித்தீர்கள்..?

சாதிகள் இல்லையடி பாப்பா - என்று
பாடம் சொல்லும் பள்ளிகளே – சாதி
வேர்களை மண்ணில்,
ஆழ்ப்படுத்தும் வேதனை ஏனோ...

கைகட்டி வேலை செய்ய,
உயர்ந்தவர் என்று
எவருமில்லாத போது...!

சாதிக்கு மட்டும்,
வண்ணம் தீட்டி...
மேடை ஏற்றலாமோ...!?

ஜாதி என்பது வெறும்
வாய் வார்த்தையைக்கூட,
நம்மிடம் வலம் வரவேண்டாம்...! 

ஜாதியை அகற்றப் போராடிய
பாரதியின் பாடல்களும்...
பெரியாரின் முழக்கங்களும்
ஓய்ந்து விட வேண்டாமே...!!

ஜாதிக்கு எதிரான
என் வார்த்தைகளும்...
அவர்களின் வார்த்தைகளை,
நினைவு படுத்தட்டுமே...!

ஜாதியை அகற்றியே
புதிய சரித்திரம் படைப்போம்...!

மனித மனங்களின்று,
ஜாதி எனும் பிணி,    
விலகி நிற்கட்டும் எப்பொழுதும்...!

Written by JERRY

Wednesday, 15 November 2017

திருட்டுப்புத்தி

சிறுவயதில் குறும்புகளால்..
சில்மிசங்கள் செய்த நாட்கள்,
ஏராளமாய் இருக்கத்தான் செய்கிறது...!

பொறுப்புகள் பொறுப்பாக இல்லாவிட்டாலும்...
போட்டிகளில் பொறுப்புகள் பலசமயம்,
தலைதூக்கி நின்ற நாட்கள் அதிகம்...!

பள்ளிகளில் சிறுசேமிப்பு புத்தகங்கள்,
சேமிக்க கத்துக்கொடுத்த்தோ இல்லையோ...?
நண்பர்களை விட அதிகம் சேமிக்க வேண்டுமென்று,
மனதில் கிளர்சியை தூண்டியுள்ளது...!

மிட்டாயை கண்ட நாக்குகளுக்கு...
ஏமாற்றத்தை கொடுத்துவிட்டு எப்படியாவது,
அதிகம் சேமிக்க எனக்குள்,
ஆர்வத்தை வளர்த்துவிட்டது...!

இருபத்தைந்து பைசா துட்டுமிடாயில்...
ஐம்பது பைசா கிடைக்குமென்ற பேராசையில்,
ஏமாந்த நாட்கள் ஏராளம் என் வரலாற்றில்...!

ஒருநாள்...
அப்பாவின் சம்பள பணத்தில் சிறிதை அவர்,
அறியாமல் திருடிச்சென்று சேமிப்பு புத்தகத்தை,
வளர்ச்சியின் உச்சியில் சேர்த்துவிட்டேன்...!

திருடனை கண்டுபிடித்த போலீஸாய்...
வெளுத்து வாங்கிய தந்தையின் புரட்சியில்,
உண்மையை தானே உலரியது உதடுகள்...!

இரவில் கோவம் தணிந்து தந்தை மெதுவாய்,
தலையை நீவிக்கொண்டே பேசினார்...

வளர்சி என்பது விரைந்து கிடைத்துவிட்டால்...!
வலிகள் மிகுந்த வழிகள் மாறிப்போகும்...!!

தேவைகளை சுருக்கி கையிருப்பை,
காத்துக்கொள்ள கற்றுக்கொள்...!

வாழ்வில் உயர்ந்த உன்னை...
வளைத்துவிட எவருக்கும் துணிவிருக்காது – என்ற
வார்த்தைகளின் உண்மையை உணர்ந்து,
சேமிக்க திருடினாலும் அது,
திருட்டு திருட்டுதான் என்பதை உணர்ந்தேன்...!
சேமிக்கவும் சரியாக கற்றுக்கொண்டேன்...!!

அன்றைய அறிவுரை இன்றைய உலகை,
போராடி வெல்ல துணையாய் இருக்கிறது...!!!

Written by JERRY

Tuesday, 14 November 2017

என்னைப் பெற்றவளே

தவழும் போது நீ,
தழுவவில்லை..!

அழும்போது நீ,
அணைக்கவில்லை...!

சிரிக்கும் போது நீ,
சிலிர்க்கவில்லை...!

பசிக்கும் போது நீ,
பாலூட்டவில்லை...!

கொஞ்சும் மழலையை நீ,
ரசிக்கவில்லை...!

துன்பத்தில் நீ என்,
துணையாய் இல்லை...!

இன்பத்தை நான்,
கண்டதும் இல்லை...!

அனாதையென்றார்கள் – நீ
ஆதரவாய் இல்லை – நான்
பிறக்க மட்டும் ஏன்..?
காரணமாய் இருந்தாய்..!!

குப்பைத் தொட்டியில்,
குடிவைத்துவிடலாம் என்று...!
கருவறையில் இருந்து,
இறக்கி வைத்தாயோ...!!

என்னை பெற்றவளே...!!!

Written by JERRY

Sunday, 12 November 2017

நானும் ஏமாளி தான்

அரசாங்க பேருந்தில்...
மாணவர்களுக்கு அரசு
அளிக்கும் சலுகை,
கட்டமில்லா பஸ் வசதி...!

மூன்று மணிக்கு கல்லூரி ஓய்ந்தாலும்,
பத்து ரூபாயைக் காப்பாற்ற,
ஆறுமணிவரை தினமும்
அரசு பேருந்திற்கு காத்திருப்பது சுகமே...!

அந்தி மாலைவேளை – ஒருநாள்
முகம் நிறைந்த சோகத்தோடு,
பார்ப்பவர்களை பரிதாபம் கொள்ளச்செய்யும்
எளிமையான தோற்றத்தோடு,
எந்தன் எதிரே தோன்றிய
நாற்பது வயது பெண்மணியின்,
பரிதாபக் குரல் எந்தன் செவிகளை சேர்ந்தது...!

“திருநெல்வேலி வரை செல்லவேண்டும்
பணத்தை எங்கேயோ தவறவிட்டேன் – என்று
தேம்பி தேம்பி சொல்லிமுடித்தார்.”

எந்தன் உள்ளமும் சற்று இளகித்தான் போனது...!

பாஸ் பஸ் வராவிட்டால் மட்டும் தேவைக்கு,
கை சேமிப்பு இருபது ரூபாய் இருந்தது...!
முப்பது ரூபாய் இருந்தால் தான்,
செல்லமுடியும் என்பதை உணர்ந்து...!!
நண்பர்களிடமும் வசூலித்து,
நாற்பது ரூபாய் கொடுத்து அனுப்பினேன்...!!!

ஏதோ சாதித்தது போல் சந்தோஷத்தில்,
பேருந்தில் ஏறிப் புறப்பட்டேன்...!

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும்,
கூட்டத்திற்கு நடுவே அதே குரல்...!

“திருநெல்வேலி வர செல்லவேண்டும்
பணத்தை எங்கயோ தவறவிட்டேன் என்று.”

முதுகின் பின்புறம் நின்று கேட்பவளின்,
முகம் பார்க்க முகத்தை திரும்பினேன்...
முகத்தில் அணுவும் அசையவில்லை அவளுக்கு...!
முகத்தை திருப்பி வேகமாய் கடந்துவிட்டாள்...!!

நண்பர்களின் ஏளனச் சிரிப்பு என்னை,
எள்ளி நகையாடியதை தெளிவாய் விளங்கியது...!

ஏமாற்றுக்கார உலகில் நானும் ஒரு
ஏமாளி என்பதை உணரவைத்துவிட்டாள்..!”

வாழ்கை ஒளிந்துதான் கிடக்கிறது – அது
கற்பிக்கும் ஒவ்வொரு பாடங்களிலும்...!!  

Written by JERRY

Saturday, 11 November 2017

கடந்துபோன நாட்கள்

நண்பர்களுடன் சேர்ந்து,
நடந்து தேய்ந்த சாலை...

கை கோர்த்து நண்பர்களுடன்,
விளையாடிய வேளை...

உண்ணும்போது இடமாறும்,
உணவுப் பதார்த்தங்கள்...

ஆசிரியரை ஏமாற்றி,
கட் அடித்த வகுப்புகள்...

விளையாட்டுகளில் கலந்து,
வென்ற பரிசுகள்...

கல்லூரி கலைநிகழ்ச்சிகளில்,
கலாட்டா செய்த காட்சிகள்...

நண்பர்களோடு செய்த,
செல்லச் சண்டைகள்...

தவறுகளுக்காக முனிவரிடம்,
எழுதிக்கொடுத்த அப்பாலஜிகள்...

காதலர்களுக்கு பூங்காவான,
கல்லூரி மைதான்கள்...

சிறு சிறு கவிதைகளுடன்,
கூடிய காதல் மடல்கள்...

கடைசிநாளின் பிரிவின் போது,
எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்...

பிரிவை ஏற்க விரும்பாத,
உள்ளத்தின் வேதனைகள்...

நடத்துனரின் விசில் சப்தம்,
கேட்டு விழித்தேன்...

கண்களின் ஓரம்,
கண்ணீராய் வழிந்தது...!
நட்பினது நினைவுகள்...!!

பேருந்திலிருந்து இறங்கினேன்,
பிரிவின் வலியில் - நட்பின்
ஆழம் அறிந்தேன்...!

Written by JERRY

திருமணச் சந்தை

மனதில் எத்தனை கனவுகளுடன்,
மணக்கோலத்தில் அலங்கரித்து,
மணமேடையில் மகிழ்ச்சியோடு,
மணப்பெண்ணாய் நின்றாள்...!

திருமணச் சந்தையில் விலைபோன,
திருமகளுக்கு அவன் அன்னை,
தந்த விலையோ முப்பது சவரன்...!

கருநிறம் தானே இவள் தேகம்...!
கலைகொண்டதோ அவளின் முகத்தோற்றம்...!!

வெள்ளைத்தோல் கொண்ட மணமகனுக்கு,
உள்ளம் மட்டும் கருப்பு...!
சிறிது காலத்திலே நகை முழுவதும்,
சேட்டுக்கடையின் கல்லாப்பெட்டியை,
சித்தரிக்கத் தொடங்கியது...!!

இறைவன் கூட இறக்கமற்றவனானான்...! 
இந்த பெண்ணின் வாழ்க்கையை,
இடையராத துயரத்திற்கு பரிசாக்கினான்...!!

பிணியின் ஆட்சியில் அவன்...!
பிடிப்பற்றவள் ஆகி நின்றாள்...!!

மருத்துவமனையெறும் போர்க்களத்தில்,
மாத்திரைகளின் படையெடுப்போடு,
காலனை எதிர்த்து அவள்,
கலக்கத்தோடு போராடத் தொடங்கினாள்...!

மனதினது துணிவு குறைந்தது...!
மருத்துவர்களின் காரமும் விட்டுப்போனது...!!
கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்று,
கரம்பிடித்தவனோ கை கழுவினான்...!!!

பெற்றமனம் பித்து என்பதால் என்னவோ,
பெற்றெடுத்தவள் மட்டும் இன்னும்,
பிரியாமல் அவளோடு தத்தளிக்கிறாள்...!

இறைவா இந்த போர்க்களத்தில்,
இப்பெண்ணின் உயிர்ப் போராட்டம்...
வெற்றிகண்டு உயிர் வாழுமா – இல்லை
வாயிற்கதவை காலனுக்குக்காக திறந்து வைக்குமா..?

திருமணமான ஓராண்டில் தான்,
திருப்பங்கள் எத்தனை எத்தனை...!
வாழ்வின் கனவுக் கோட்டை,
வடிவிழந்து நிற்கத்தான் இந்தப்
பிறவி அவளுக்கு அற்பணமானதோ...!! 

கேட்கும் நெஞ்சம் துடிக்கிறது...!
கேட்பதற்கு மறந்து போனாயோ...
இறைவா,
இந்தப் பாவையின் வேண்டுதலை...!!

Written by JERRY

Friday, 10 November 2017

வணக்கம் அம்மா

ஆசிரியர் பயிற்சி முடித்த
என் உள்ளத்திற்கோ...
இல்லத்தில் உறங்க எண்ணமில்லை...
வேலை தேட விரைந்தேன்...
எனதிரு கால்களும்,
பள்ளிகளை நோக்கி படையெடுத்தது – நான்
படித்த பள்ளியின் வாயில்,
எனக்காக திறந்திருப்பதாக எண்ணம்...

சுட்டித்தனம் செய்து நான்
சுற்றித்திரிந்த இடங்களை,
பார்த்துக்கொண்டே கடந்து சென்றேன்...

பல புது முகங்களுக்கு மத்தியில்,
பழகிய பழைய முகங்கள் – என்னை
நோக்கி மெதுவாய் புன்னகைத்து...

என்ன காரணம வந்தாயோ – என்ற
அவர்களின் கேள்விக்கு இதழ்களின்
குரலில் மெதுவாய் பதிலளித்தேன்...

“வேலை வாய்ப்புத் தேடி.”

ஏற்றிவிட்ட ஏணிகளின் ஒத்துழைப்பில்
வேலையும் கிடைத்தது...
பள்ளியும் புதிதல்ல...
வகுப்பறையும் புதிதல்ல...

முப்பது மாணவர்களின், 
எதிர்நோக்கில் என்னுடைய நுழைவு...

மொத்தமாய் எழுந்து நின்ற மாணவர்களின்,
ஒருமித்த குரல் ஒலித்தது...
“வணக்கம் அம்மா” என்று

பழக்க தோசத்தில் எந்தன் தலையும்,
திரும்பி தேடிப்பார்த்தது,
எந்தன் ஆசிரியரின் வருகையை...

பின்புதான் மூளைக்கு உணர்ந்தது – இன்று
நானும் ஒரு ஆசிரியர் என்பதை...

உள்ளத்தில் புன்னகைத்து,
தொடர்ந்தேன் எனது பணியை...!!

Written by JERRY

உயிரை கரையேற்றும் வரை

தேகத்தின் சுருக்கத்தில்,
முதுமையின் முதிர்ச்சி...

வெள்ளை முடியும்,
தலையை குத்தகைக்கு எடுத்திருக்கிறது...

உடலில் இருக்கும் உயிர்,
கண்களில் ஏனோ குறைந்துவிட்டது...

தெம்பில்லாமல் நடக்கும்
துவண்டு போன கால்கள்,
நடுக்கத்தோடு உடலில் ஒட்டியிருக்கும்....

கைகளில் சில்லறை இரண்டு ரூபாய்.

கடையில் நிற்கும் மூதாடிக்கு,
கிடைத்தது ஒரு ரூபாய் தேயிலை...
மீதமுள்ள ஒரு ரூபாய்க்கு,
மீந்துபோன தூசு நிறைந்த சர்க்கரை...

இரண்டு ரூபாய் கலவையில்,
காலை பசியாற்றியது மூதாட்டியின் வயிறு...

பிள்ளைகளையெல்லாம் கரையேற்றி,
கடமைகளை முடித்துவிட்டாலும்,
உயிரை கரையேற்றும் வரை,
நாட்கள் நகர்த்த போராடுகிறது...

ஆதரவற்றவர்களுக்கு அரசின் கரம்,
நேரடியாக நீளுமா தெரியவில்லை...!
மூதாட்டிக்கு நேரடியாக கிடைத்தது...

மீதமுள்ள சத்துணவை வாரம்
ஐந்து நாட்கள் கொடுத்துவிட்டு,
இரண்டு நாட்கள் விடுமுறை...

அருகில் உள்ளவர்களின் இறக்கத்தில்,
இரண்டு நாட்கள் நகர்கிறது...!

கண்களில் கண்ணீரோடு மூதாட்டியை
தொடர்வதை விட்டுவிட்டு விரைந்தேன்...

வீட்டை அடைந்ததும் அலைபேசியில்,
அன்னையை அழைத்து ஆதரவாய்,
“அம்மா சாப்பிட்டாயா... உடம்பு எப்படியிருக்கு...
வேண்டுமென்பதை மறைக்காமல் கேள்...”
என்ற இதழ்களின் வார்த்தைக்கு
கண்ணீர் சிந்தியது எனதிரு கண்கள்...!

பெற்றவளை  விட்டு விட வேண்டாம்...!

காலத்தின் முதிர்சியில்... உடலின் தளர்ச்சியில்...
உடனிருந்து தாங்குவோம்... உள்ளத்தின் அன்போடு...

Written by JERRY

Monday, 6 November 2017

புதிய துடைப்பம் - written by Jerr


அரசு அலுவலகம்
திரும்பும் திசையெங்கும்
தூசுகள் நிறைந்த
பலவித ஃபைல்கள்...

வயது முதிர்ந்து விட்டாலும்
உயிரை விட முடியாமல்
தவிப்பவைகள் பல...
!
ஆண்டுகள் செல்ல செல்ல
புது புது ஃபைல்கள்
மேலே மேலே அடைக்கப்பட்டது..!

என்றாவது பயன்படும்
என்பதால் என்னவோ
அலுவலக அலமாரிகளில்
அவைகளுக்கு தங்க அனுமதி..!

அன்று.....
அதிகாரியின் கையில் ஒரு
முக்கிய ஃபைல் - மெதுவாக
அலுவலகத்தை எட்டிப் பார்த்தது...!

முக்கியம் என்பதால் மதிப்பு
சற்று அதிகமாகத்தான் இருந்தது...

ஆணவம் அதிகமானதால்
பழைய ஃபைல்களைப் பார்த்து
ஏளனமாய்ச் சிரித்தது..!

என்னைப் போல் அல்லவா
பிறக்க வேண்டும் என்று
எள்ளி நகையாடியது...!!

அமைதியாகக் கேட்டு கொண்டிருந்த
வயதான பழைய ஃபைல்
மெல்லமாய் சொன்னது...

ஒரு காலத்தில்
நானும் புதிய துடைப்பம் தான் என்று..!

இன்று...
பழைய ஃபைல் கட்டில்
சிதைந்த நிலையில்-இந்த

புதிய ஃபைலும் உறங்குகிறது...!

written by JERRY

இப்படித்தான் மனிதன்


விடுதியில் தங்கியிருப்பதால்
தேவையின் போது மட்டும்
ஏ.டி.எம் ல் பணம் எடுப்பேன்...

நேற்றும் வழக்கம் போலவே
பணம் எடுக்க ஏ.டி.எம் சென்றேன்..

மொழியைத் தெரிவு செய்ய
அறிவுறுத்தியது எந்திரம்...

படித்திருக்கிற ஆணவம்
தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தை
தெரிவு செய்ய தூண்டியது...!

வங்கி இருப்பிலிருந்து
2000 ரூபாய் எடுத்தேன்...

இயந்திரத்தின் அடுத்த கேள்வி.
பணபரிவர்த்தணைக்கு ரசீது
அவசியம் இல்லை என்றால்
வேண்டாம் என்ற பட்டணை
தெரிவு செய்ய சொன்னது...!!

இதன் மூலம் மரம் அழிவதை
நாம் படிபடியாக தடுக்கலாம்-என்று
எனக்கு அறிவுறுத்தியது... நானும்
சராசரி மனித இனம் தானே...!!

இந்த சிறு காகிதத்தை தவிர்த்தால் மட்டும்
மரத்தை பாதுகாக்க முடியுமோ என்று
நகைத்துவிட்டு ரசீது பெற்று வந்தேன்...!!

தன் தாய் மொழியை தெரிவு செய்ய
கவுரவம் பார்க்கும் மனமும்...
ஒருவர் மாறுவதால் மட்டும்
அனைத்தும் மாறிடாது என்ற
அற்ப எண்ணம் உள்ளவரை...
எவ்வளவு முயற்சித்தாலும் எந்த

முன்னேற்றமும் வரப் போவதில்லை...!!!

written by JERRY