Saturday, 9 December 2017

அரசாங்கமே

வயிற்றை நிரப்ப,
குடும்பம் காக்க,
தொழில் செய்ய நாங்கள்...
கடல் நோக்கி சென்றோம்...!

புயலொன்று உருவாகி,
புரட்டிப்போடும் என்ற தகவல் கூட,
செவிகளை சேரமுடியாத...
தூரம் சென்றுவிட்டோம்...!

தாக்கிய புயல்...
தூக்கி எறிந்ததில் – நாங்கள்
நடுக்கடலில் நடுக்கத்தோடு,
நாதியின்றி தவித்தோம்...!

உதவிக்கரம் நீட்டி...
உரியவர்களிடம் எங்களை சேர்த்திட,
படையொன்று திரண்டு வருமென்று...
உயிரைக் கையில் பிடித்துத் தத்தளித்தோம்...!

எட்டு நாட்கள் நகர்ந்தும்,
எட்டிப்பார்க்காத அரசாங்கம்...
எங்களை உயிரென்று,
எண்ண மறந்துவிட்டது...!

பலமழிந்து உடல் சோர்ந்து,
வாழ்வை வெறுத்து - எங்களின்
உயிர் துறந்தோம்...!

பிணம் கண்டாவது,
மனம் இரங்கி – என்
உடன் வந்து உயிரோடு – இன்னும்
கடலில் தத்தளிக்கும் எம்மக்களை,
காப்பாற்றும் எண்ணம் வராதோ – என்றெண்ணி
பிணமாய் கரை ஒதுங்கினோம்...!

நஷ்ட ஈடு கொடுத்து – எங்களை
அடக்கம் செய்து – எங்கள்
உடலுக்கு அஞ்சலி செலுத்தாமல்...!

இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்...!
எஞ்சிய உயிர்களாவது மிஞ்சட்டும்...!!

Written by JERRY

No comments:

Post a Comment