Thursday, 8 March 2018

முட்டாள் கூட்டம்

நம் வாழ்க்கையில்...
நாம் யாரென்ற தேடலின்,
பயணத்தில் சிலர்...!

பிறந்துவிட்டோம் நாம்,
சாகும்வரை வாழவேண்டும் – என்ற
விரக்திக் கூட்டங்களாய் சிலர்...!

பணம் தான் வாழ்க்கை – என்ற
தவறான புரிதலால்...
உயிர்களின் உணர்வுகளை மறந்த,
சுயநலக் கூட்டங்களாய் சிலர்...!

நல்லநேரம் பிறக்காதா – என்று
ஜோதிடர்களையும், சாமியார்களையும்...
படையெடுத்து பின் தொடரும்,
ஏமாளிக் கூட்டங்களாய் சிலர்....!

வாழ்வின் வளமான நாட்கள்,
வாடிப்போனதை நினைத்து...
சருகாகி நிகழ்காலத்தை தொலைக்கும்,
தன்னம்பிக்கையிழந்த முடர்களாய் சிலர்...!

அதிஷ்டம் கதவைத் தட்டாதா – என்று
வாழ்க்கைக் கதவை பூட்டிக்கொண்டு...
காத்திருக்கும் மடையர் கூட்டங்களாய் சிலர்....!

ரசிகர்கள் என்ற பெயரில்,
சுய சிந்தனை இல்லாமல்...
சிலரை மேடையேற்ற தன் வாழ்வை,
பாதாளத்தில் புதைத்துக் கொண்டிருக்கும்,
செம்மறியாட்டுக் கூட்டங்களாய் சிலர்...!

மதுவிற்கும், மாதுவிற்கும்...
மனதை போதையேற்றி,
கலாச்சாரத்தை கந்தல் உடையாக்கி,
சமூகத்தை சீரழிக்கும்
கயவர் கூட்டங்களாய் சிலர்...!

மகுடி வாசிப்பில் அடங்கிப்போகும்,
படம் எடுக்கும் பாம்பைப் போல்...
ஏற்றுக்கொள்ள முடியாத மாற்றங்களை,
எதிர்த்து போர்க்கொடி தூக்கினாலும்...
ஆட்சியின் அடக்குமுறைக்கு அஞ்சி,
அடங்கிப் போகும் கூட்டங்களாய் சிலர்...!

அதிகாரத்திற்கு, ஊழலுக்கும் - தன்னை
அற்பணித்து கடமையாற்றி...
நியாயத்தைக் குழிதோண்டிப் புதைக்கும்,
தேசத்துரோகக் கூட்டங்களாய் சிலர்...!

புல்லைக் கொடுத்து வளர்ப்பது,
பலியிடத்தான் என்றறியாத ஆடாய்...
இலவசங்களால் வாழ்ந்து விடலாம் – என்று 
வாழ்வாதாரத்தைத் தொலைத்துக்கொண்டிருக்கும்,
அறியாமை அப்பாவிக் கூட்டங்களாய் சிலர்...!

இப்படி சிலர்.. சிலர்... என்று
சிதறிக்கிடக்கும் பலரின்,
இதயங்களை இணைத்து...

மாற்றம் கொண்டு வந்து,
முன்னேற்றம் காண காத்திருக்கும்...
பாரதத்திற்கு தெரியவில்லை...!

ஏமாற்றம் ஒன்றே...
ஏமாறாமல் தன்னில்...
வாழப்போகின்றது என்பதை...!!!

Written by JERRY

No comments:

Post a Comment