Wednesday, 23 August 2017

ஏழையின் உழைப்பு



 பல வருசத்துக்கு முன்னாடி...
ஒரு கிராமத்துல ஒரு பண்ணையார் இருந்தார்...

அவருக்கு துணையா ஒரு வேலையாள்
கூடவே இருப்பார்...

இருவருக்கு ஒவ்வொரு ஆண் பிள்ளைகள்
குறிப்பிட்ட வயது வந்ததும்
இருவரும் அவரவர் அப்பாட்ட சொல்றாங்க...
நா தனியா போய் சம்பாதிக்கப்போறேனு...!

உடனே பண்ணையார்
தன் சொத்துல இருந்து
அன்றைய மதிப்பில் நூறு ரூபாய எடுத்துகொடுத்து
தொழில் பண்ணச்சொல்றார்...!

அந்த வேலையாளோ...
தான் இதுவரை சேமித்து வைத்த ஒத்தரூபாய
மொத்தமா எடுத்துக்கொடுத்து
இத வச்சி பொழச்சிக்கோன்னு சொல்றார்...!!

என்னதான் தங்களுக்கு ஏக்கர் கணக்குல
நிலம் இருந்தாலும்... தனக்குன்னு சொந்தமா
நூறு ரூபாயில ஐம்பது ரூபாய்க்கு நிலத்தை வாங்கி...
விவசாயம் பண்ண முடிவு செய்தான்...
பண்ணையார் மகன்...!

ஆனால் வேலையாள் மகன்
ஒரு ரூபாய்ல ஐம்பது பைசாவுக்கு
ஒரு சின்ன நிலத்தை குத்தகைக்கு எடுத்தான்...!!

வழக்கம் போல் பண்ணையார் மகன்
வேலையாள் வைத்து வேலை பார்க்கிறான்...!
வேலையாள் மகன் வேற வழியில்லாமல்
அவனே இறங்கி வேலை பார்க்கிறான்...!!

நாட்கள் நகர்கிறது...
அறுவடை நாளும் வருகிறது...

நிலம் பெரிது என்பதால்
கிடைத்த மகசூலை மொத்த விலைக்கு விற்கிறான்
பண்ணையார் மகன்...

ஆனால் நிலம் சின்னது என்பதால்
கிடைத்த மகசூலை... சந்தையில் சென்று
நேரடியாக மக்களிடமே விற்கிறான்...

என்னதான் நிலம் பெரியது...
அதன் விளைச்சல் பெரியது என்றாலும்
வேலையாள் சம்பளம் போக
கிடைத்தது என்னவோ...
மொத்த விலைக்கு விற்றதில்
கொஞ்ச லாபம் தான் பண்ணையார் மகனுக்கு...

ஆனால் நிலம் சின்னதென்றாலும்
வேலையாள் கூலி, வாங்கி விற்பவன் லாபம்,
கிடைத்ததை விற்ற லாபம் என பார்க்கும் போது...

பண்ணையார் மகனுக்கு நூறு ருபாய் என்பது
தங்களது சொத்தில் ஒரு பங்ககத்தான் தெரிந்தது...!

ஏழையின் மகனுக்கு அந்த ஒரு ரூபாய்
தந்தையின் உழைப்பு என புரிகிறது...!!

written by *JERRY* 🍓


Sunday, 20 August 2017

சாப்படாத தோசை 60 ரூபாய்




வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்பு கிடைப்பதே அரிது. ஏதாவது விஷேசம், பண்டிகை என்று விடுமுறை வந்தால் தான் உண்டு. அந்த நாட்களுக்காக ஏங்கி தவிப்பவர்களில் நானும் ஒருத்தியே. 

எதிர்பார்த்தது போல் அந்த நான்கு நாள் விடுமுறையும் வந்தது. ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் ஏறினேன். பேருந்து 6 மணிக்கே கிளம்பியது. தொலைவில் இருக்கும் ஊருக்கு 12 மணி நேர பயணம் என்பதால் பேருந்து அன்று இரவு 11 மணிக்கு, பயணிக்கும் பயணிகள் உணவு உண்பதற்காக திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசூர் அருகே உள்ள ஒரு கேண்டினில் நிறுத்தப்பட்டது....

அதுவரை அமைதியாக இருந்த நடத்துனரின் சப்தம் திடீர் என்று கேட்க, அரை தூக்கத்தில் இருந்த சிலர் முழித்துக்கொண்டனர். “வண்டி இங்க மட்டும் தான் நிக்கும். சாப்புடுறவங்க போய் சாப்ட்டுக்கோங்க..” என்று

உடல்நலக்குறைவால் தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயம். எனவே சாப்பிடுவதற்காக பேருந்திலிருந்து இறங்கி ஹோட்டலில் நுழைந்தேன். முன் பலகையில் ஹோட்டல் அபூர்வா (அசைவம்) என்று எழுதப்பட்டிருந்தது.

ஆர்டர் செய்த எனக்கும் என் உடன் வந்த பயணிகளுக்கும் இலையிட்டு, அதில் இரண்டு தோசையுடன் சேர்த்து முட்டை குருமா வைக்கப்பட்டது. தோசை பார்பதற்கு உண்ண மனம் வரவில்லை, குருமாவின் நிலையோ கவலைக்கிடம்.

தோசையை அப்படியே வைத்துவிட்டு சாப்பிடாமல்.. ஆர்டர் செய்த ஒரே காரணத்திற்கு 60 ரூபாய் பணம் செலுத்திவிட்டு பயணிகள் பசியில் பேருந்திற்கு திரும்பினர்.

பணம் செலுத்தும் போது இரவில் பசியாற வருபவர்களுக்காக திறந்துள்ள உங்கள் ஹோட்டலில் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவை தரலாமே, இப்படி செய்வது சரியா என்று கேட்டதற்கு.. சாப்பிட இஷ்டம்னா தின்னு இல்லைனா துட்ட வச்சிட்டு போய்ட்டே இரு என்று அனைவர் முன்பும் கேவலமாக பேசுகிறார் அதன் உரிமையாளர்.

நான் ஒருத்தி என்பதாலும், உடன் வந்தவர்கள் அமைதியாக சென்றதாலும் வேறு வழியின்றி சாப்பிடாத தோசைக்கு பணம் செலுத்திவிட்டு... அவருடைய பேச்சை கேட்டு மன உளைச்சலில் பேருந்தில் ஏறி வெறும் வயிற்றில் மாத்திரை போட்டேன்.

வேற நல்ல உணவகத்தில் நிறுத்தலாமே என்று நடத்துனரிடம் கேட்டால்.. அரசு பேருந்து அனைத்தும் இங்கு தான் நிறுத்தப்பட வேண்டும். எங்களை ஏன் கேட்கிறீர்கள் என்று கடித்துக்கொண்டார். அந்த கேண்டினில் அரசு பேருந்தை தவிர வேறு பேருந்து நிற்காததால் அரசிற்கு ஒப்பந்தம் என்ற பெயரில் கப்பம் கட்டி செயல்படும் உணவகம் என்று நன்றாக தெரிகிறது. இது போன்ற வழிப்போக்கர்கள் சாப்பிடும் உணவகத்தில் வருபவர்களுக்கு மனதில் வலியை ஏற்படுத்தாமல் இருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதை படிக்கும் மற்றவரும் முடிந்தவரை பகிருங்கள்... நாளை உங்கள் பணமும் உண்ணாத உணவிற்கு செலவாகலாம்...

இப்படிக்கு
உங்களில் ஒருத்தி
#ஜெர்ரி